Wednesday, 15 March 2017

ஹபிடபிள் கோள்கள்' (Habitable Planets)

ஹபிடபிள் கோள்கள்' (Habitable Planets)

நாஸா விஞ்ஞானிகள் இந்த வாரம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கை பல விசயங்களைச் சிந்திக்கத் வைக்கிறது. அந்த விசயங்கள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் நாஸாவின் அறிக்கை எதுவெனப்ப் பார்த்துவிடலாம்.

தன்னைச் சுற்றிக் காற்றுவெளி மண்டலம் எதுவுமில்லாமல், வரண்டுபோய்க் காணப்படும் சிவப்புக் கோள்தான் செய்வாய். 'அட்மாஸ்பியர்' என்னும் காற்றுவெளி மண்டலப் படலங்கள் ஒரு கோளைச்சுற்றி இருந்தால் மட்டுமே அங்கு உயிரினங்கள் வாழமுடியும். இப்படிப்பட்ட கோள்களை 'ஹபிடபிள் கோள்கள்' (Habitable Planets) என்பார்கள். சூரியக் குடும்பத்தில், மூன்றாவது இடத்தில் மிகச் சரியாக நின்று கொண்டதால், பூமிக்கு இப்படியானதொரு உயிரின வாழ்வுக்கான (ஹபிட்டபிள்) சாத்தியங்கள் சாத்தியமாகியிருக்கின்றது. அது இப்போதிருக்கும் இடத்தில் இல்லாமல், சூரியனை நோக்கிய திசையில் சில தூரத்திலோ அல்லது செவ்வாய் நோக்கிய திசையில் சில தூரத்திலோ நகர்ந்து, இருக்குமாயின், இந்த ஹபிட்டபிள் தன்மை பூமிக்கு வாய்த்திருக்காது. அதனால், பூமி நின்றுகொண்டு சுற்றும் அந்தக் குறிப்பிட்ட அதிசய இடத்தை 'ஹபிட்டபிள் வலயம்' (Habitable Zone) என்பார்கள். பூமியைச் சுற்றி மூடிய பாதுகாப்புக் கவசம்போல, காற்றுவெளி மண்டலம் மட்டுமில்லாமல், பூமியைப் பாதுகாக்கும் அதிசக்தி வாய்ந்த மின்காந்தப்புலனும் உருவாகியிருக்கிறது. இவையே, சூரியனிலிருந்தும், அண்டவெளியிலிருந்தும் பூமியை நோக்கி வரும் காஸ்மிக் கதிர்களை உள்நுழைய விடாமல் தடுப்பவை. சரி, விசயத்துக்கு வருகிறேன்.

நாஸா விஞ்ஞானிகள் ஒரு விண்வெளித் திட்டத்தை வரையறுத்திருக்கின்றனர். செவ்வாய்க் கோளுக்கு ஒரு விண்கலத்தை அனுப்பி, அதன்மூலம் அதிக சக்தி வாய்ந்த காந்தப் புலத்தைச் செயற்கையாக உருவாகினால், செவ்வாய்க் கோளுக்கும் அட்மாஸ்பியர் உருவாகுமென அவர்கள் நம்புகிறார்கள். அதற்கான அனைத்துச் சாத்தியங்களும் செவ்வாயில் காணப்படுகின்றனவாம். நம் எதிர்காலச் சந்ததிகள் வாழ்வதற்காகப் புதியதோர் உலகத்தைச் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

சரி.....!
இந்தச் செய்தியில் சிந்திக்க வைக்கும் பல விசயங்கள் இருக்கின்றன என்று ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறேன். அது என்ன சிந்திக்க வைக்கும் விசயங்கள்? உங்களுக்கு அப்படி ஏதும் தெரிகிறதா? தெரியாவிட்டால் பரவாயில்லை.

இந்தச் செய்தி வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாஸா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உலகத்திற்கு அறிவித்தது. அதாவது, பூமியிலிருந்து நாற்பது ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் 'ட்ரப்பிஸ்ட் 1' என்னும் சிவப்பு நட்சதிரத்தை ஏழு கோள்கள் சுற்றுவதாகவும், அவற்றில் மூன்று கோள்களுக்கு ஹபிட்டபிள் தன்மையுடனான காற்றுவெளி மண்டலங்கள் உள்ளதாகவும், குறிப்பாக அதில் ஒரு கோளுக்கு சமுத்திரங்கள்கூட இருப்பதாகவும் நாஸா அறிவித்தது. இப்படிப்பட்ட அதிசய அமைப்பு அபூர்வத்திலும் அபூர்வம். இப்போது, மேலே செவ்வாய்க் கோள் சம்மந்தமாக நாஸா வெளியிட்ட அறிவிப்பையும், இதையும் சேர்த்துப் பாருங்கள். ட்ரப்பிஸ்ட்டின் கொள்களுக்கு அதிசயமாக இப்படியொரு அமைப்பு இயற்கையிலேயே கிடைத்திருக்கலாம். இல்லையென்றால்...........!

சமுத்திரம் இருக்கும் சிறப்பான அந்தக் கோளில் அதிபுதிசாலியான ஏலியன்கள் வசித்து, அவை ஏனைய கோள்களைச் செயற்கையாக ஏன் ஹபிட்டபிள் கோள்களாக மாற்றியிருக்க முடியாது? இதுவும் ஒரு சாத்தியம்தான் அல்லவா?

பூமியிலிருக்கும் மனிதனாலேயே வறண்ட ஒரு கோளுக்கு செயற்கையாக உயிர்வாழும் தன்மையைக் கொடுக்க முடியுமென்றால், அங்கு வசிப்பவர்களால் அது ஏன் முடிந்திருக்காது?
என்ன புரிகிறதா?

No comments:

Post a Comment